சனி, 11 ஆகஸ்ட், 2012

NAADI ASTROLOGY !!


நாடி ஜோதிடம் என கூறப்படும் இந்த ஆரூடம் இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் , சிதம்பரம் அருகே வைதீஸ்வரன் கோயில் என்னும் ஊரிலும் , மற்றும் திருச்சி அருகே திருவானைகாவிலும்  பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த வகை ஜோதிடத்தில் நம்முடைய வாழ்க்கை நிகழ்சிகள் அனைத்தும் ஏட்டு சுவடிகளில் பதிவாகி இருக்கும். இந்த ஏட்டு சுவடிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முனிவர்களால் எழுதப்பட்டு , தற்சமயம் ஜோதிடர்களால் நமக்கு தெரியப்படுத்தப்படும் ஆரூடம்.   பொதுவாகவே எனக்கு இவ்வகை ஜோதிடங்களில் அவ்வளவு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

அப்போது நான் திருச்சியில் பணி புரிந்து வந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நாடி ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். ஜோதிடம் பார்க்க வேண்டும் என அவர் கூற, நானும் அவருடன் திருவானைக்கா சென்றோம். நாடி ஜோதிடர் இருந்த இடத்தை கண்டு பிடிக்க சிரமம் எதுவும் ஏற்படவில்லை. எனக்குள் பல சந்தேகங்கள். இது என்ன நம் முற்கால முனிவர்களுக்கு நம் ஜோதிடம் எழுதி வைப்பதில் என்ன ஆர்வம்? எல்லோருக்கும் எவ்விதம் எழுத முடிந்தது ? அமெரிக்கா ருஷ்யா போன்ற நாடுகளில் வசித்து வரும் மக்களுக்கு எழுதப்பட்டு இருக்குமா?  இதில் முன் ஜென்ம நிகழ்சிகளையும் , வரும் ஜென்ம நிகழ்சிகளையும் எவ்விதம் எழுதினர்? அவை அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , நம் வாழ்க்கை நம் கையிலே இல்லையா? நம் வாழ்க்கையில் நமது சுதந்திரம் என்ன?  மேலும் இந்த ஜோதிடம் பலரால் கூறப்படும்போது ஏட்டு சுவடிகள் எல்லோருக்கும் எவ்விதம் கிடைத்தது? இதை எழுதியதாக கூறப்படும் முனிவர்களின் நோக்கம் என்ன? இது போன்ற பல சந்தேகங்களுடனே சென்றேன்.


ஜோதிடர் இருந்த வீடு ஒரு மாடி வீடு. உள்ளே சென்றோம். ஜோதிடர் மாடியில் இருப்பதாகவும் சென்று பார்க்கலாம் என்றும் அங்கு இருந்தவர் கூறினார். மேலே மாடியில் ஒரு பெரிய ஹாலில் ஜமக்காளம் விரிக்கப்பட்டு அங்கே ஜோதிடம் பார்க்க வந்தவர் சிலர் அமர்ந்திருந்தனர். ஜோதிடரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.  எங்கள்  பெரு விரல் அச்சு ( மையில் ஒற்றி ) எடுத்துக்கொண்ட ஜோதிடர் , " உங்கள் சுவடிகளை தேடி வைக்கிறேன். நீங்கள் நாளைக்கு வாருங்கள்" என அனுப்பி வைத்தார். எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. எனது நண்பரிடமும் சொன்னேன். " சரி பரவாயில்லை - நாளை வந்து பாப்போம்" என்றார்.

அடுத்த நாள் மறுபடியும் அவரிடம் சென்றோம். எங்களை அமர சொன்ன அவர் உள்ளே சென்று சில சுவடிகளை கொண்டு வந்தார். எங்களிடம் " நான் இந்த சுவடிகளை படிக்கிறேன்- உங்கள் பெயர்களுடனும் மற்ற விவரங்களுடனும் ஒத்திருந்தால் , அதை மேலே படிக்கிறேன். இல்லாவிடில் , மற்ற சுவடிகளை படிக்கிறேன்- உங்கள் சுவடிகள் வரும் வரையில்" என்றார்.

முதலில் எனக்கு ஜோதிடம் பார்ப்பதாக சொன்ன அவர் சில சுவடிகளை படிக்க ஆரம்பித்தார். என் பெயர் சரியாக இருக்கும்- ஆனால் தொடரும் விவரங்கள் சரியாக இருக்காது. கடைசியில் ஒரு சுவடி எடுத்து அவர் படிக்க ஆரம்பித்த போது நான் உண்மையிலேயே அதிர்ந்து போனேன்!!
என் பெயர் சரியாக இருக்க, என் தந்தை தாயார் பெயர்கள், என் வயது , என் உடன் பிறந்தோர் விவரங்கள் அனைத்தும் அந்த சுவடியில் இருந்தன!


அந்த சுவடிகளை அவர் எனக்கு காண்பித்தார். மிகவும் பழைய சுவடிகள்தாம். அனைத்தும் பாட்டு வடிவத்தில் ( தமிழில்) எழுதப்பட்டு இருந்தன. முதலில் அவர் என்னுடைய பிறந்த நாள், அன்றைய கிரக நிலைகள், பிறந்த நேரம் ( நாள்- மணி-நிமிடங்கள்-) அனைத்தும் இருந்தன. அவரிடம் நான் சென்ற சமயத்தில் என் வயது, நான் பணி புரிந்து வந்த இடம், என் குழந்தைகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் இருந்தன. பின்னர், என் வருங்கால நிகழ்சிகள் அனைத்தும் எழுதப்பட்டு இருந்தன. அவை அனைத்தையும் ஓர் நோட்டு புத்தகத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். என் நண்பருக்கு அன்று சுவடிகள் கிடைக்க வில்லை. அதற்கு அடுத்த நாளும் சென்று அவருக்கும் பார்த்தோம்.
இதற்கு நான் ஜோதிடருக்கு கொடுத்தது  Rs 500  மட்டும்தான்.


திரும்பி வரும்  வேளையில், எனக்குள் பல எண்ணங்கள். இவருக்கு எப்படி இந்த விவரங்கள் கிடைத்தன? ஒருக்கால் முதலில் படித்த சுவடிகளின் மூலம் நான் கொடுத்த விவரங்களை வைத்து சொல்கிறாரோ?  அது இருக்க வாய்ப்பில்லை. என் மனதை படித்து சொல்லி இருப்பாரோ? அதுவும் இருக்க வாய்ப்பில்லை- ஏனெனில் என்னுடைய ஜாதகம் எனக்கே சரியாக தெரியாது. மிகுந்த குழப்பத்துடனே வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் இருந்த என் ஜாதகத்தை எடுத்து பார்த்தபோது எல்லா விவரங்களும் சரியாக இருந்தன!

இந்த நாடி ஜோதிடத்தில் நான் விஞ்ஞான ரீதியாகவோ அல்லது என் பகுத்தறிவு ஆராய்ச்சி மூலமாகவோ ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கு புரியாத , மூளையால் பகுத்தறிய முடியாத நிகழ்ச்சி இது.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இது நடந்து ஒரு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. வருங்கால நிகழ்வுகள் என அவர் எழுதி கொடுத்திருந்தவைகள் பல தவறாக இருக்கிறது!  அவர் எழுதி இருந்தது போல் நடக்க வில்லை !!

இருக்கும் நிகழ்ச்சிகளையும், சென்றவைகளையும் சரியாக சொல்லும் இந்த நாடி ஜோதிடம் ஏன் வருங்காலத்தை சரியாக கூற வில்லை?
என்னுள் எழும் பல ஐயங்களுக்கு இன்னும் விடை இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது முனிவர்களுக்கும் இந்த சுவடிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அதன் உண்மையான விவரங்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என்பது ஒரு சாத்தியக்கூறு  ! பார்க்கலாம்-  வேறு எதாவது தெரிந்து கொள்ளும் போது இதன் மர்மங்கள் புலப்படலாம!!











திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ALL IS WELL THAT ENDS WELL !!!


அண்மையில் ஒரு ருசிகரமான செய்தி படித்தேன். ஊருக்கு பொதுவான கிணறு ஒன்றில் இரண்டு  ௫௦௦500  காசு தாள்கள் மிதந்து கொண்டிருப்பதை கிராம மக்களில் யாரோ பார்த்துவிட்டு அனைவரையும் அழைத்து காண்பித்தாராம் .  உடனே நம்மூர் கலாச்சாரப்படி அவரவர் தனக்கு தோன்றியதை வதந்தியாக பரப்பினர். சிபிஐ ரைடுக்கு  பயந்து யாரோ ஒரு பெரும் பணக்காரர்  பாலிதீன் மூட்டையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து கிணற்றில் கொண்டுவந்து வீசி விட்டு சென்றதாகவும் , (பின்னர் எடுத்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில்!) அது கொண்டு வரப்பட்ட காரை பார்த்ததாகவும் சொல்ல, நம் கிராம மக்கள் உடனேயே செயல் வீரர்களாகினர்!!

நீர் இறைக்கும் மோட்டார் ஒன்று உடனேயே செயல் படுத்தப்பட்டு; கிணற்றில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரும்
 ' மூட்டை '  கண் படாததால் , தூர் வாரி , சேறு மண் வெளியேற்றப்பட்டது. அப்போதும்  மூட்டை கண்படவில்லை. ஏமாற்றமடைந்த மக்கள் " அப்போதே நினைத்தேன் " போன்ற வசனங்களை உதிர்த்து விட்டு,  நீர் இறைக்கவும், தூர் வாரவும் ஆனா செலவை பொது செலவாக்கி சென்றனர்.

எது எப்படியோ , சுத்தம் செய்யப்படாத ஊர் கிணறு சுத்தமானது.!
இந்த வதந்தி இல்லாவிட்டால், யார் அந்த கிணறை கவனிக்க போகிறார்கள்?

இதன் பின்புல ஆராய்ச்சியாக , மக்களின் நம்பிக்கை பொதுவாக இயற்கையை ஒட்டியதாக இல்லாமல், "பர பரப்பான"  கற்பனைகளை ஒட்டியதாகவே  இருக்கிறது.  இதை பயன் படுத்திதான் நம் செய்தி தாள்கள் ( அனைத்தும் அல்ல- ) பிழைப்பு நடத்துகின்றன!

ஒரு சமயம் பரபரப்பு செய்தி ஒன்று- " ராஜா ஜிக்கி" கல்யாணம். ! சரியாக பார்க்காத மக்கள் ஆர்வத்துடன் செய்தி தாளை வாங்கி பார்த்தால், பின்னணி பாடகர்கள் " திரு ராஜா அவர்களும் , செல்வி ஜிக்கி அவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள்!

" பிரதமர் இந்திரா ஜட்டியுடன் பறந்தார்!! இது என்னடா கொடுமையாக இருக்கிறதே என்று பார்த்தால், பிரதமர் இந்திரா , உதவி ஜனாதிபதி திரு ஜட்டி உடன் விமானத்தில் செல்கிறார்!

என்ன தெரிகிறது? வதந்தி என்னும்போது, மூளை செயலற்று , ஆசைகளும் உணர்ச்சிகளும் அந்த செய்திக்கு அர்த்த வடிவம் கொடுக்கின்றன.  நேர் அர்த்தத்தில்  எந்த பரபரப்பும  இல்லை. இந்த வதந்திகளின் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் புலம்பல்களை யார் கவனிக்கிறார்கள்  ?