புதன், 13 ஜூன், 2012

Autobiography of a Ghost !

ஆதம்பாக்கம் சுடுகாட்டில் அமைதியாக வசித்து வந்த என்னை அடித்து ஓட்டி விட்டு தில்லை கங்கா நகரை உருவாக்கி விட்டார்கள் . அதன் முன்னர் ஸ்கூல் செல்லும் பிள்ளைகள் எங்கள் சுடுகாட்டின் வழியாகத்தான் செல்ல வேண்டும். " அப்பா எனக்கு பயமாக இருக்கிறது " என்று சொன்ன ஒரு பையனிடம் அவன் தந்தை "  "Dead men dont do mischief ; Beware of the living " என்று கூறியதை கேட்டு என் இதயம் இருந்த இடம்  நெகிழ்ச்சியில் விம்மியது. ஆனால் எத்தனை பேர் அப்படி நினைக்கிறார்கள்? அவர் கூறியது கூட மகனுக்கு ஆறுதல் வார்த்தைகளே ஒழிய எனக்கு அனுதாபமாக இல்லை என்பது எனக்கு கூட புரிகிறது.  போகட்டும் இது வாழ்பவர்கள் என நினைப்பவர் உலகம். எங்களுக்கு இடம் இல்லை. எங்களை விரட்டும் பணியில் பிழைப்பை நடத்தும் மந்திரவாதி மற்றும் பூசாரி வர்கங்கள் எங்களுக்கு என்ன செய்கிறார்கள். அவர்கள் பிழைப்பை நடத்த உதவும் உயிரில்லாத கருவிகளுக்கு ஆயுத பூஜை செய்யும் இந்த மனித வர்க்கம் எங்களுக்கு பூஜை செய்யா  விட்டாலும் போகிறது';  வேப்பிலையாலும் தொடப்பத்தாலும் அடிக்காமல் இருந்தாலே நன்றியுடன் இருப்போம். போதாததற்கு பலர் வீட்டில் தூங்கும் முன்னர் வாசற்படியில் உலக்கை,தொடப்பம், செருப்பு ,அப்புறம் அருவாள் வேறே, எங்களை மிரட்ட .

புலம்பி புண்ணியம் இல்லை. எங்களுக்கு என்று ஜாதி மதம் மற்றும் அவர்களின் போராட்ட பாதுகாப்பும்  இல்லை ; ஜாதி ஒழிய வேண்டும் என்று கூவும் சங்கங்களும் சாதியற்ற எங்களை அடிப்படை அங்கதினர்களாக சேர்க்கவில்லை. ஜாதியற்றவர்கள் அனைவரும் நாதியற்றவர்கள் என்று
அனுபவிக்கும் எங்களுக்கு  புரியும். எந்த சாதி இனமும் கிட்டே சேர்க்காது.  கடவுள் கூட எங்களுக்கு கிடையாது. எங்கு போவோம் நாங்கள்?  நானாவது பரவாயில்லை; எனக்கு மறைந்து வாழ ஒரு வீடு இருக்கிறது. வறுமை கோட்டின் கீழ் வாழும் பல பேய்கள் புளிய மரத்தின் மேலும் , இன்னும் பல பேய்கள்  இடிந்து நொறுங்கிய பாழடைந்த ஒட்டு வீடுகளின் ஒட்டடைக்கு நடுவிலே ஒளிந்து வாழ்கிறார்கள் ,பாவம்.

போகட்டும் புலம்பல், என் கதைக்கு வருவோம். நான் ஏன் பேயாக மாறினேன் என்பதை அறிய ஆவலாக இருப்பீர்கள். அனைவரும் இறந்த பின்னர் பேயாக அலைய வேண்டிய கட்டாயம் இருக்கிறதா , அதில் நல்ல பேய் கெட்ட பேய் என்ற பாகுபாடு உண்டா என்றெல்லாம் கேள்வி வைத்திருப்பீர்கள். முடிவில் எங்களை வைத்து எதாவது செய்ய முடியுமா , உங்களால் எதிர்க்க முடியாத நபர்களை எங்களை வைத்து தீர்த்து கட்ட முடியுமா என்று நினைப்பீர்கள். அது எதுவும் முடியாது. எங்களை விரட்டாமல் ' வாழ' விட்டால் உங்களுக்கு உதவியாக இருப்போம். உங்களில் கெட்டவர்கள் இருப்பது போல் எங்களிலும் கெட்ட பேய்கள் உண்டு.உங்களிலிருந்து உருவானவர்கள்தானே .ஆனால்  நான் நல்ல பேய். வாழ்ந்து செத்தவன். மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். இந்த 'தொங்கல்' காலத்திலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவியை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் நூறு வருடங்களுக்கு முன்னே இறந்தேன்.   ஒரு சிறு கிராமத்தின் பஞ்சாயத்தின் நாட்டாமையாக  இருந்தேன். அந்த காலத்தில் எல்லாம் உங்கள் சினிமாவில் வருவது போல் சொம்பு பஞ்சாயத்து எல்லாம் கிடையாது.எனக்கு பிடித்த உங்கள் சினிமா நடிகர்கள்  விஜயகுமாரும் சரத் குமாரும்தான்.
 நாட்டாமை வேஷத்தில் நிறைய நடித்திருகிறார்கள்.ஆனால் நான் என் தீர்ப்பை மாற்றி எல்லாம் எழுத மாட்டேன். கௌரவக்கொலை ( honour killing) எல்லாம்  இல்லை. என்னிடம் எல்லாரும் பயத்துடனும் மரியாதையுடனும் இருந்தார்கள்.ஆனால் ஊரென்றால் மற்ற வ்யவகாரமும் இருக்கும்தானே. எனக்கும் எதிரிகள் பங்காளிகள் உருவில் இருந்தார்கள்; காத்திருந்தார்கள் கௌரவர்கள் கணக்காக.

வாழ்வு முடிவதற்கு முன்னே துர் மரணம் அடைபவர்கள் மறு பிறவிக்காலம்  வரை பேயாகவோ, பிசாசாகவோ அலைய வேண்டும் என்று ஆண்டவன் விதித்தாராம் . அது என் விஷயத்தில் உண்மையாகி விட்டது. ஒரு நில வழக்கில்  பங்காளிகளுக்கு எதிரான  என் தீர்ப்பு என் கொலையில் முடிந்தது. என்னை கொண்டு வந்து புதைத்த பின்னர், நான் மட்டும்தான்  இருந்தேன்.அப்போதேல்லாம் வீடுகள் அதிகம் கிடையாது. என் சுடுகாட்டின் அருகே வீடு ஏதும் இல்லை. பக்கத்திலே ஓர் ரயில்வே லைன் இருந்தது  பக்கதிலிருநத ஒரே கோவில் அரிச்சந்திரன் கோவில்தான்.பிணத்தை கொண்டு வருபவர்கள் அரிச்சந்திரன் கோவில் அருகே சற்று நேரம்
காத் திருப்பார்களாம் . ஒருக்கால் பிணத்திற்கு உயிர் வந்து விட்டால் திருப்பி கூட்டி கொண்டு செல்வார்கள். இல்லையேல் இறுதி சடங்குகள் நடக்கும். காட்டின் உள்ளே வந்த பின்னர் உயிர் வந்தால் கூட்டி செல்ல முடியாதாம் ஊருக்குள்ளே. இப்போது உரையே சுடுகாட்டுக்குள் கட்டி விட்டார்கள். என்ன ஆச்சு இவர்கள் சாத்திரம்? ஊருக்குள்ளே இருந்தவர்கள் சுடுகாட்டுக்கு வந்து விட்டார்கள். நாங்கள் ஊருக்குள்ளே இருக்கிறோம். சவங்களுடன் சமத்துவம்!!
உயிரோடு இருப்பவர்களுடன் சண்டை!

இப்போது நான் இருப்பது ஓர் வாடகை வீடு. அதாவது எனக்கு பிடித்த நபர்கள் இந்த வீட்டில் குடியிருக்கிறார்கள். மனித தன்மையுடன் கூடிய ஒரு நல்ல குடும்பம். ஆகவே வாழ தெரியாதவர்கள். நான் அவர்களுடன் இருப்பதை அறிவார்களா என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் சில சமயங்களில் இந்த வீட்டின் பெரியவர் ' மாடிப் படியில் யாரோ இறங்கி வருவது போல் இருக்கிறது' என கூற கேட்டிருக்கிறேன். அனால் அதற்காக யாரும் பயப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு முன்னர் இருந்தவர் எல்லாம் 5 அல்லது 6 மாதங்களே  இருந்து பின்னர் மாறி விடுவார்கள். இவர்கள் அப்படி இல்லை. குடும்ப தலைவருக்கு இரண்டு மகன்கள். பெரியவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது. சிறியவனுக்கு பெண் பார்க்க வேண்டுமென்று பேசி கொள்கிறார்கள். நல்லவர்கள். வரும் பெண் நன்றாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். I have become a member of their family, an unseen guest . 


என் ஆசை வீண் போகவில்லை. இளையவனுக்கு கல்யாணம் பேசி முடித்தார்கள். ஆவலுடன் காத்திருந்தேன். அடுத்த மாதம்  கல்யாணமாம்.

அந்த நாளும் வந்தது. கல்யாணம் முடிந்து அவர்கள் தேன் நிலவுக்கு- அப்படி என்றால் என்ன?- சென்று விட்டு வந்தார்கள். நான் மாடி படி அருகே நின்று கொண்டிருந்தேன். ஆரத்தி எடுத்து விட்டு வீட்டுள் கூட்டி  வந்தார்கள்.

அவள் நான் நின்றிருந்த இடத்தை நிமிர்ந்து பார்ததாள் . இது என்ன? எனக்கு என்ன ஆகிறது? அவள் முகத்தை பார்த்த பின்னே எனக்கு ஏன் வேறு எதுவும் பார்க்க முடியவில்லை! 'அம்மா'!! என்று என் இல்லாத இதயம் கூவிற்று! கடவுள் எனக்கு வழி காட்டி விட்டார் என்று தெரிந்து விட்டது! அம்மா என்னை எடுத்து கொள் என்று யாருக்கும் கேட்காமல் கெஞ்சினேன்.

இனி உங்களிடம் பேச எனக்கு நேரமும் இல்லை- ஆசையும் இல்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக