வெள்ளி, 27 ஜூலை, 2012

KURANGU BASKAR !!

குரங்கு பாஸ்கர் HDFC  பேங்க்  அருகில் (ஒரு மரத்தடியில்) நின்று கொண்டிருந்தான். ஏதோ பாங்கில் அக்கௌண்டில் பணம் போடவோ எடுக்கவோ நின்றிருந்தான் என எண்ணாதீர்கள் . தன்னுடைய 'இரை 'க்காக காத்திருந்தான். அவன் குறி எப்போதும் தப்பியதே இலலை . குரங்கு என்று அவனுக்கு காரணப்பெயர் போலீஸ் காரர்கள் அன்புடன் வைத்திருந்தனர். கையில் வைத்திருக்கும் பணப்பையை குரங்கின் லாவகத்துடனும் வேகத்துடனும் பிடுங்கிக்கொண்டு ஓடினானாகில் அவனை பிடிக்க இன்னொரு குரங்குதான் வர வேண்டும். பறி கொடுத்தவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் முன்னே குரங்கு பாஸ்கர் மறைந்து விடுவான். அவனுக்கும் போதாத காலங்களில் மாட்டிகொண்ட போது தர்ம அடி வாங்கிக்கொண்டு போலிசிடம் பிடி பட்டிருக்கிறான். அவனுக்கும் இப்போது வயசாகிறது. ஒரு தடவை போலீஸ் கேஸ் ஆகி ஜெயிலுக்கு போய் விட்டால் மறுபடியும் போவதற்கு தப்பு செய்ய வேண்டும் என்ற அவசியமே நம்மூரில் இல்லை. தீராத திருட்டு கேஸ்களை இவனை மாதிரி ஆஸ்தான கேடிகள் மீது சுமத்தி போலீஸ் அவ்வப்போது இவனை ஜெயில் விருந்தாளி ஆக்கி விடுவார்கள். இதற்கெல்லாம் குரங்கு பாஸ்கர் பயப்படுவதே இல்லை. அவனே சமயத்தில் அவர்களை தன மேல் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளும்படி கேட்டு கொள்வான். அதற்கு அவனுக்கு காசு கூட கிடைக்கும்!    அப்புறம் 'போலீசுக்குஆதரவாக ' பொய் சாட்சி சொல்லி காசு பண்ணுவான்.'தொழில்  ரகசியங்களையும் ஜெயிலில் சக கேடிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தான். ஜெயில் பல சமயங்களில் 'vocational training college 'ஆகத்தானே நடக்கிறது? அந்தஸ்துக்கு தகுந்தாற்போல் அவர்கள் வெளியே வரும்போது இரண்டு விரல்களை உயர்த்தி 'V '( எனக்கு 'வெட்கம் இல்லை என்பதின் அடையாளமாக!) காண்பித்து ' தொண்டர்களுடன் ' செல்வார்கள். பாவம், குரங்கு பாஸ்கருக்கு அந்த  மாதிரியெல்லாம் அந்தஸ்தும் இல்லை- ஆட்களும் இல்லை, ஆர்ப்பாட்டமும் இல்லை.சரி, நம் கதைக்கு விட்ட இடத்திலே வருவோம்.


பணத்தை பறி கொடுக்கவென்றே சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பாங்கிலிருந்து பணத்தை 'மஞ்சள் பையில் 'தான் வைத்து எடுத்து செல்வார்கள்.ஏன் என்று கேட்காதீர்கள். தமிழர் பண்பாடோ என்னமோ தெரியாது. நம் குரங்கின் குறியெல்லாம் அவர்கள்தான். இவனுக்கேன்றே பணம் 'withdraw ' செய்து இவனிடம் கொடுக்க வந்தாற்போல் நடந்து கொள்வார்கள் . சரியான் 'வசூல்' நாட்களில் குரங்கு பாஸ்கர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு  'தொழில்' செய்ய வேண்டிய வேலையே இருக்காது. அந்த நாட்களிலெல்லாம் 'வோட்காவ'  ஊத்திகினு ஓடியாடி' பாடுவான் . 


இன்று 'புதன்' கிழமை. குரங்கு பாஸ்கருக்கும் இன்றுதான் நல்ல நாள். மாதத்தின் முதல் வார புதன் கிழமை விசேஷமான நல்ல நாள். 'மஞ்சள் மகிமைக்காக' காத்திருந்தான். அவன் எண்ணம் வீண் போகவில்லை. ஒரு வயதானவர் 'மஞ்சள் பையுடன்' பாங்கிலிருந்து வெளிப்பட்டார். அவர் வெளியே வந்து தன் தோளில் போட்டிருந்த துண்டால் முகம் துடைக்க முற்படுகையில் 'மஞ்சள் பை' கை மாற குரங்கு பக்கத்து சந்து வழியாக ஓடி மறைந்தான். 'பை' கொஞ்சம் கனமாக இருந்தது. அடுத்த பஸ் ஸ்டாப்பில் ஒரு பஸ் ஏறி மெயின் பஸ் ஸ்டாண்டிற்கு டிக்கெட் வாங்கினான். 'அப்பாடி ' இன்று நல்ல வேட்டைதான். ஆண்டவன் புண்ணியத்தில் மகத்தான மகசூல் கிடைத்தது என்று மகிழ்ந்தான்.


மெதுவாக பையினுள் கையை விட்டு நுழைத்து பார்த்ததில் மூன்று கட்டு கரென்சி இருந்ததை உணர்ந்தான். 'எவ்வளோ காசு, பேசாம ஒரு கடை வைத்து விடலாம்' - அப்படியே படிப் படியாக முன்னேறி அரசியல்' செய்து' ஒரு நல்ல 'பொசிஷன் ' வந்து  விட்டால்  பின்னர் குரங்கு அடை மொழியை விடுத்து , 'டாக்டர பாஸ்கர் ' என தொண்டர்களை விட்டு கூப்பிட சொல்லலாம். " டாக்டர் அழைக்கிறார் - அலை கடலென திரண்டு வாரீர்! என்று போஸ்டர் ஒட்டும் நாளை எண்ணி கனவு  கொண்டிருக்கும்போது  மெயின் பஸ் ஸ்டான்ட் வந்து  விட்டது. கனவுகளோடு இறங்கிய குரங்கு பாஸ்கருக்கு போதாத காலம் போலீஸ் உருவில் கீழே காத்திருந்தது . " இதோ பாரு 307, கும்பிடப்போன  குரங்கு குறுக்கே வந்திருக்கு பார் - வாடா , உன்னை எங்கெல்லாம் தேடுறது , வா போலாம்' என்றார் 347. 'சார், நான் வீடு வரைக்கும் போய் விட்டு வருகிறேன்- அர்ஜென்ட் வேலை இருக்கிறது- என்று நழுவப்பார்த்த கு.பாஸ்கரை அவர்கள் விடுவதாயில்லை. 'அதெல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம்- கோர்ட்டுக்கு இப்போது போக வேண்டும்- ஒரு முக்கியமான கேசில் நீ நம்ம லோக்கல் தலைவருக்கு (தாதா) பதிலாக உள்ளே போக வேண்டும்- அவருக்கு கவுன்சிலர் எலெக்சன் வேலை இருக்கிறதாம்! என்றார் 307. போச்சுடா சாமி எல்லாம் என்று தன 'ஜாதகத்தை' நொந்து கொண்டு கு.பாஸ்கர் போலீஸ்காரர்கள் பின் சென்றான். 10 நிமிஷ வேக நடைக்கு பின் மூவரும்  போலீஸ் ஸ்டேஷன் சென்றடைந்தனர் .


'என்ன கிடைச்சுட்டானா - வாடா குரங்கு, உன்னையெல்லாம் போய் தேடி பிடிக்க வேண்டியதாகி விட்டது பார்-' என்று வரவேற்றார்- ரைட்டர். "சட்டை பான்ட் எல்லாம் கயட்டி வைத்துவிட்டு உள்ளே போ- அது என்ன பையில் ?-பாரு 307?  சார் ரைட்டர் சார், இவன் பையில் 3 கட்டு 500ரூ இருக்கிறது சார்- எங்கோ அடித்திருக்கிறான்- என்றார் 307-"  " அடி வயிற்றில் ஒரே சமயத்தில் ஐஸையும் நெருப்பையும் ஒன்றாக உணர்ந்தான். குரங்கு பாஸ்கர். -" சரி சரி நல்லதா போச்சு - காசையும்  கொடுத்து கேசையும்  ஒத்துகிட்டு-  பார் உள்ளே போறான் பார் - என் நண்பேன் 'என்று தொடை தட்டி  சிரித்தார் ரைட்டர் .


" பிச்சை எடுத்தாராம் பெருமாள் - அதை புடுங்கிண்டாராம் இந்த அனுமார்"!! என்று சொல்லி ஆரவாரமாக சிரித்தார் 307. அதை வழி மொழிந்து  பின்சிரிப்பு செய்தார் 347. 


பெருமாள் யார் இதில் அனுமார் யார் என்று புரியாத  குரங்குக்கு தாங்க முடியவில்லை . " அந்த பழமொழி சொன்ன காலத்தில் போலீஸ் இல்லை  " என்றான். " என்னடா முனகல் ? இன்ஸ்பெக்டர் வரார் இப்போது- கோர்டுக்கு நேரமாச்சு " போடா  உள்ள "  'என்று அவனை நெட்டி உள்ளே தள்ளினார் 347.  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக