வெள்ளி, 27 ஜூலை, 2012

TAMIZHAR PANBAADU

முடிச்சூர் ரோடு பிரிட்ஜ் அடியில் நின்று கொண்டிருந்தேன்.எனக்கு  வேலை வெட்டி எதுவும் கிடையாது. ஆனால் மீதி ஜனங்களுக்கு அப்படி இல்லை. எல்லோரும் பிஸி ஆகத்தான் இருந்தார்கள். காலை 6 மணிக்கே களை கட்டி இருந்தது . அதுதான் நம்மூரின் சிறப்பியல்பு. நாலு பக்கமும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். பூரா சேறும் மண்ணும். போதாததற்கு மழை காரணமாக சாக்கடை நிரம்பி வழிந்து ரோடு எல்லாம் கருப்பு சேறு . ஜனங்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அதற்கு அவர்களுக்கு நேரம் கூட கிடையாது. 'what cannot be avoided has to be endured ' என்ற விரக்தி சித்தாந்தத்தில் , அப்படி இருக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் அனைவரும் வேகமாக போய் கொண்டிருந்தார்கள். சுற்று முற்றும் பார்த்தேன். ஒரு போர்டு - 'கன ரக லாரிகள் காலை 8 மணிக்கு மேல் இந்த வழிக்குள் வரக்கூடாது ' என்று. ஆனால் ஒரு போலீஸ் கான்ஸ்டபில் 6 மணிக்கெல்லாம் அங்கு ஆஜர் ஆகி இருந்தார். லாரிகள் அனைத்தும்  அவரை தாண்டி நிறுத்தி, தங்களால் இயன்றதை அவருக்கு கொடுத்து உற்சாகமூட்டி சென்றனர்.


(மேலே இருக்கும் படங்கள் நான் சொன்ன இடத்தில எடுத்ததில்லை- ஒரு பானை சோற்றுக்கு என்னும் விளக்கத்தில் பாருங்கள்)
பிரிட்ஜ் கீழே இருந்த சுவர் பூரா போஸ்டர்கள் !. 'வீரன் ஆறுமுகத்துக்கு கண்ணீர் அஞ்சலி- நண்பர்கள் ( அவர்கள் பெயர் அனைத்தும் இனிஷியலுடன்); படப்பை அருகே மலிவு விலையில் மனை- " டாக்டர் அய்யா அழைக்கிறார்"                        ( இலங்கையில் தமிழர் கொடுமைக்கு காரணமான 'ராஜபக்சே வை எதிர்த்து (அல்லது -,லோக்கல் பிரச்னைகளில் யாரை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்று இன்னும் முடிவாகாததால்) ; 'தளபதி ஸ்டாலின் அழைக்கிறார்- "கௌன்சிலர் எலெக்க்ஷனில் வெற்றி பெற வாய்ப்பு கொடுத்த 'அம்மாவுக்கு நன்றி-நன்றி நன்றி-; -டாக்டர் விஜயகாந்த் அழைக்கிறார்- டாக்டர் கலைஞர் அழைக்கிறார்- கடல் அலையெனத் திரண்டு வாரீர்- தமிழ் இன மான தலைவர் தொல் திருமாவளவன் அழைக்கிறார்- பக்கத்தில் ஒரு சீறும் சிறுத்தை -' 'வருங்கால பிரதமரே என நேஹ்ருவின் நேர் வாரிசு ராகுல் காந்தி படம்-( பின்னால் மூன்று நான்கு வட்டகளில் - இந்திரா காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி படங்கள் ) முடிவே இல்லை!

இவர்கள் நமக்கு நிஜமாகவே என்ன செய்கிறார்கள்? அவர்கள் யாரும் நம்முடன் இல்லை எனபதை இவர்கள் எங்கிருந்தோ நம்மை அழைப்பதிலிருந்தே  தெரிகிறது. அது  இருக்கட்டும். அது என்ன 'கடல் அலை போல' திரண்டு வருவது? என்றோ ஒரு நாள் 'சுனாமி' போல் திரண்டு வந்து இந்த சுவரொட்டி அரசியலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தோன்றியது. அப்போது சைக்கிளில் சுவரோட்டிகளோடு ஒரு வாளி நிறைய பசையோடு ஒருவர் வந்து  இறங்கினார். ஒரே போஸ்டரின் காப்பிகளை  அந்த பிரிட்ஜ் சுவர் பூரா ஒட்டினார் . ஏற்கனவே இருந்த சுவரொட்டிகள் மேலே.! ஒரே போஸ்டரை  ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றாக ஒட்டுவதில் என்ன அர்த்தம்? பத்தோடு பதினொன்று- அத்தோடு இது  ஒன்று என போக கூடாது- ஜனங்களுக்கு வேறு வழியில்லாமல் இந்த போஸ்டரை தான் பார்த்து உணர வேண்டும் - என இருக்கலாம்

இவை அனைத்தையும் என்னை தவிர யாரும் பார்த்து கொண்டிருக்க வில்லை. கையில் பையுடன், அல்லது TVS பைக் பின்னால் அவர்கள் ஸ்கூல் குழந்தைகளுடனும், அவரவர்கள் வேலையே கண்ணாக போய் கொண்டிருந்தனர்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். ஒரு சின்ன கோயில் - மக்கள் நிறையவே இருந்தார்கள். ஒரு ரோடு கடை- இட்லி தோசை கடை- கடைக்காரம்மா முதல் ஈட்டில் எடுத்த இட்லிகளை காக்காய்க்கு கூரை மேல் வைத்தார்கள். நம்மூர் நம்மூர்தான்- எவ்வளவு வேண்டுமானாலும் கத்து." சொரணை கெட்ட தமிழன் ", "சோற்றால் அடித்த பிண்டம் "  "வாழை மட்டை"  இன்னும் மனதில் என்னென்னமோ கற்ற உன்  தூய தமிழில் 'துப்பு'!     ஆனால் நம் ஜனங்கள் மாற மாட்டார்கள்-நல்லவர்கள்-கோவில் போவார்கள்- மசூதி செல்வார்கள்- சர்ச் போவார்கள்.இரக்க உணர்சியோடுதான் இருப்பார்கள்.  தப்பு தவறு அங்கங்கே நடந்தாலும் உதவிக்கு நிச்சயமாக வருவார்கள்.(போலீஸ் தொந்தரவு இல்லாமல் இருந்தால்). 'தமிழர் யார் என்று நீங்கள் நிச்சயிக்க வேண்டாம். ராஜ ராஜ சோழன் விழா- எப்போது பிறந்தான்? தெரியாது - உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டன்  பெயர் என்ன? என்னவாக இருந்தார்? சத்தியமாக தெரியாது.'சுத்தமான தமிழை இன்னும் பேசும் சேர நாட்டவர் தமிழரா அல்லரா?
சொல்ல மாட்டீர்கள்... திராவிட நாட்டின் எல்லைகள் என்ன ? அது  குழப்பமான விஷயம் . தமிழ் பேசிய பாரதியாரை-ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பெரியவரை  தமிழரல்ல என்பீர்கள்! ராமன் ஆரியன் என்று புராணத்தில் படித்து விட்டு ராவணன் திராவிடன் என்பீர்கள்.ராமன் 'சோம ரசம் குடித்தாரா  அல்லது பூண்டு ரசம் குடித்தாரா என்னும் விவரத்தில் உங்கள் புலமையை காட்டுவீர்கள். ராவண லீலா கொண்டாடுவீர்கள். இராவணன் சிங்கள நாட்டினன்.. . அப்போது அங்கு இருக்கும் சிங்களவர் அனைவரும் திராவிடரா?"தொப்புள் கொடி உறவு " என்று பந்தம் கொண்டாடும் நீங்கள் அவர்கள் அவலத்தில் அரசியல் செய்வது உலகறிந்த உண்மை - அவர்களுக்கும்  நன்றாக தெரியும்... சொந்த வரலாறையே சுத்தமாக அறியாத   நீங்கள்' வந்தவர் 'வரலாற்றை பற்றி வாய் கிழிய பேச வந்து விடுவீர்கள்.  . தன்மான இனம் பிரித்து தமிழர் அடையாளம் காட்ட  தயங்காமல் வந்து  விடுவீர்கள்.

நம் ஜனங்கள் நல்லவர்கள். அவர்கள் கவலைகளையும்  கஷ்டங்களையும் நீங்கள் என்ன அறிவீர்கள்? அவர்கள் மலர் கிரீடம் தரித்திருக்கும் மன்னர்கள் இல்லை. 'கும்பி எரியுது குடல் கருகுது - உனக்கு "குளு குளு " கார்  ஒரு கேடா? என்று ஆட்சியில் இருந்தவரை விமரிசனம் செய்த  நீங்கள் '" பக்தவச்சலம் அண்ணாச்சி - பருப்பு விலை என்னாச்சி என்று பரிகசித்த நீங்கள்,  உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? 'பக்தவச்சலம் குரங்கே- பதவியை விட்டு இறங்கேன் ! என்று போஸ்டர் ஒட்டியவர்கள் நீங்கள். இதுதான் தமிழர் பண்பாடா? " பெரும் தலைவர்- வாழ்நாள் பூரா வாடகை வீட்டில் இருந்தவரை- " காமராஜர் முதுகு  தோலை  உரித்தால் இரண்டு டமாரம் பண்ணலாம் என்று விமரிசதவர் நீங்கள். " இதுதான் நம் பண்டைய கலாசார பண்பா?அடுத்தவரை குறை கூறினால் நீங்கள் உயர்ந்தவர் என்று அர்த்தம் கிடையாது.  நம் மக்களை நீங்கள்  தொந்தரவு செய்யாமல் விட்டாலே தமிழ் நாடு நிச்சயம்  முன்னே வரும். 'சிந்துபாத் மீது சவாரி செய்த கிழவன் போல் அவர்கள் முதுகில் நீங்கள் சவாரி செய்யாமல் இருந்தாலே  அவர்கள் எதிர் காலம் நன்றாக இருக்கும். கால் பிடித்து இழுக்கும் சுயநல தவளைகளாக நீங்கள் இருப்பதால்தான் அவர்கள் முன்னேற்றம்  தடை படுகிறது..

அவர்களை வாழ விடுங்கள்; .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக